மாடத்தில் அமர்ந்து விட்டு
குட்டிச்சுவரிலும் அமர்கிறது
இது சமதர்மப் புறா

*
நெருங்கி இருப்போரை
விரட்டி விட்டு
அருகி இருக்க ஆரம்பிக்கிறது "நான்"

*
டஸ்ட் பின்னில் கூடு கட்டும்
முட்டை ஓடுகள்
நிலாக்களை பொறிக்கின்றன

*
தொட்டா சிணுங்கியை
சுருக்கும் விரலில்
தொட தொட சிணுங்கும் திரில் இருக்கிறது

*
நாளையோடு திருவிழா முடிந்து விடும்
அதற்குள் ஒருமுறை தொலைய வேண்டும்
ஒருமுறை கிடைக்க வேண்டும்

*
விழி தேடும் வண்ணத்துக்குள்
என்ன செய்ய
கருப்பு வெள்ளை தான் வசதி
*

திருவிழா முடிய முடிகிறது
திரு திருவென முழிக்கும் சாமிக்கு
துக்கமா தூக்கமா

*
முணங்குதலின் தொழில்நுட்ப வெர்ஷன்
குறுஞ்செய்தி அனுப்பிய அடுத்த நொடி
அதை அழிப்பது

- கவிஜி

Pin It