தோல்வி
பச்சோந்தியின் தோலால் ஆன
சிம்மாசனம்

அதன் பளபளப்பிற்குப் பலியாகிற
பலவீனமான மனசுதான்
அதற்குப் பிடித்தமான இரை.

அந்தச் சித்திரவதை நிபுணனிடமுள்ள
சோம்பலின் மிகக் கூரிய ஆயுதத்தில்
அட்டையின் மூன்று பற்கள் ஒட்டியிருக்கும்.

செல்லாத நாணயங்களைச் சேர்த்துவைத்த
உண்டியல் உடைத்துக் கொடுக்கும்
அதன் பணம்
நிச்சயம் உதவப் போவதில்லை.

கனவில் கோபித்துக் கொண்ட அப்பாவை
திருப்திப் படுத்த வழியில்லை.

எதிர்பார்ப்புடன் இருக்கும் மகனுக்கு
எந்த பதிலும் கைவசமில்லை.

தோல்வியை வெற்றி கொள்வதற்கு
வேண்டியனவெல்லாம்
வெற்றியின் மரத்தடி நோக்கி விரைகிற
துறவியின்
ஆயிரம் கால்கள்!

- நா.வே.அருள்

Pin It