உணர்வாழத்தின் தரை அதிர
படபடக்க வைக்குமொரு
பாடல்
எதேச்சேயாகக் கேட்க நேர்ந்தது

இசை தொடுத்த
ஒலிப்பரவலால்
வார்த்தையோடு வார்த்தையாய்
நானும் தொடுக்கப்பட்டிருந்தேன்

அந்த
கவியொலி மாலையில்
நீங்களும்
தொடுக்கப்பட்டிருக்கிறீர்களா
என்பது
உங்களால்தான் சொல்ல முடியும்

கசங்கிய
கடந்த கால இளமைப்பூவின்
மணம் வீசக் காணலாம்

பெருஞ் சோகத்தில் தனித்து
அலைந்துருகிய
கனா பொழுதின்
காலம் ஒன்று
புதைகுழியிலிருந்து
மீண்டு வெளிவருவது
இசையின் அரூப நாடகம்

பழையபடி பழைய மனம் அழத் தொடங்குவதை
முற்றிய மனம்
கன்னத்தில் கைவைத்து
உற்றுக் கேட்கிறது

மரணத்தை இருந்து கைக்குலுக்கும் இடம்
அற்புதமானது இல்லையா?

யாருக்கேனும் நேர்ந்ததுண்டா
ஒரு பாடல்
தன் சொந்த பிணத்தை
சுமந்து
தன்னுயிர் கடந்து செல்வதை

இசைத்தவன் இருக்கிறான்
பாடியவன் இருக்கிறான்
காயங்களையே தின்று ஏப்பம்விட்ட
கவிதைக்காரன் இருக்கிறான்
அவர்களை எல்லாம் விட்டுவிட்ட
இந்தப் பாடல்
இன்னும்
எங்களையே கவ்விப் பிசைய
ஏன் அலைகிறது

ஜீவ உடலை வருட வரும்
இந்த 'ஈரமான ரோஜாவே'
இன்னும் எத்தனைக் காலம்
சோகக் கதகதப்பை
காமப் பனிநீரை
பிலிற்றுமோ?

அந்தப் பாடலை
கேட்க நேரும்போதெல்லாம்
பெருஞ்சோக வானமொன்று
நிலா மழை பொழிந்துவிட்டு
மனதைப் பிசைவதை
நீங்களும்
உணர்கிறீர்களா?

இது
பாடல் மட்டுமல்ல
இது இசை மட்டுமல்ல
இவை தாபத்தைப் பிழியும்
வரிகள் மட்டுமல்ல

ஜீவனும்
மரணமும்
ஒரே இடத்தில் கேவுவதை
ஆறுதலோடு நோக்கும்
இருப்பின் மகோன்னதம்.

- அகவி

Pin It