கவிஞர்கள்
சூதாடிகளாக இருக்கிறார்கள்.

அவரவர்களுக்குப் பிடித்த
சதுரங்கங்களை
அவரவர்களும்
ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

சாதுர்யமாகத் தேடிக் கொள்கிறார்கள்
சதுரங்கப் பலகைகளை.

சதுரங்கக் கட்டங்களின்
நிறங்களையும்
அவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

சிலருக்கு
வெள்ளைக் கறுப்பு
சிலருக்கு
கறுப்பு சிவப்பு
சிலருக்கு
பச்சை மஞ்சள்
சிலருக்கு
ஆரஞ்சு வெள்ளை.

சொற்களைக் காய்களாக
உருட்டுகிறார்கள்.

*****

காதல் உருட்டாட்டங்கள்
களை கட்டுகின்றன.
சகுனிக்குக் கூட
காதலிகள் கிடைத்துவிடுகிறார்கள்.

மதுக் கோப்பையில்
ஐஸ் கட்டிகள் மிதப்பதுபோல
சதுரங்கத்தில்
காதலர்கள்
உருண்டு புரள்கிறார்கள்.

எனது சதுரங்கத்திற்கான
சொற்களின் காய்களைத் தேர்ந்தெடுப்பதில்
எனக்கொரு பிரச்சனையிருந்தது.

சொர சொரப்பாய் இருந்த
சொற்களின் காய்கள்
கூழாங்கற்களைப்போலக்
குழைந்து விட்டிருந்தன.

அவற்றில்
சில கவிஞர்களின் கைரேகைகள் பதிந்து
காய்களின் அச்சுகள் சிதைந்திருந்தன.
சில காய்களோ
வார் அறுந்த காதல் சுற்றுப் பயணப்
பாத ரட்சைகள் போல
தேய்ந்திருந்தன.

சில காய்களை மூடியிருக்கும்
பெண்களின்
சல்லாத் துணி முந்தானைகள்.

சில காய்களில்
காதலியின் அதீத வேர்வை நெடி.
சில காய்களில்
ஒட்டியிருக்கும்
காதலியின் ஒற்றைக் கூந்தல் இழை

இவற்றில்
ஏதேனும் ஒன்றாவது இல்லாமல்
உருட்டுவதற்கான சொல் கிடைப்பது
துர்லபமாகிவிட்டது.

மேலும்
காதலின் மடி சுகத்தில்
சொற்கள் சோம்பேறிகளாகி விட்டன.

அவளுக்காகக் காத்திருந்து காத்திருந்து
கம்பங்களைப் போல
பூமியில் புதைந்து போன
கால்களால்
இனி நடப்பதே சாத்தியமில்லை.

பேன் பார்க்கும் சாத்திரத்தின்
பிரம்மைகளில் மயங்கி
கை விரல்கள்
காதலியின் தலையில்
கூந்தல் கொக்கிகளாகவே மாறிவிட்டன.

*****

சொற்களின் நம்பகத் தன்மை
எப்படியாக மாறிவிட்டது எனில்
துகிலிரி சபையில்
நிர்வாண சங்கீதத்தின்
நித்திய சாம்ராஜ்யம்!

எனது சதுரங்கத்திற்கான
சொற்களின் காய்களைத் தேர்ந்தெடுப்பதில்
எனக்கொரு பிரச்சனையிருந்தாலும்
இவற்றை மீறித்தான்
தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

காதல் லீலைகளைத் தாண்டிப்
போர்க்கள மைதானத்துக்குச்
சதுரங்கத்தை நகர்த்தியாக வேண்டும்.

சிப்பாயாக இருந்தால் என்ன?
மதுவின் மயக்கத்தில்
தேச வரைபடத்தை வைத்துச்
சூதாடிய மன்னர்களுக்கு எதிராக
சீட்டுக்கவி பாடியே ஆக வேண்டும்.

ஆச்சரியம்தான்…
சுவையானதாவென
கண்ணப்பன் மாதிரி
கடித்துக் கடித்துத் தேர்ந்தாலும்
சொற்களில்
அழுகல் நாற்றம்…

சாமிக்குப் படைக்க
தட்டில்
அம்மா சோறு போடும்போதே
மூக்கு முகர்ந்து விடுவதைப்போலத்தான்
ஒவ்வொரு சொல்லையும்
கவிதையில் படைக்கிறபோது
என் மனம் நுகர்ந்து பார்க்கிறது.

ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது
ஒரு மன்னன்
சதுரங்கத்தை ஆடி
நாட்டையே இழந்துவிட்டபோது
ஒரு கவிஞன்
சதுரங்கத்தை ஆடி
நாட்டையே மீட்டு விட முடியாதா என்ன?

- நா.வே.அருள்

Pin It