காலநதிப் பயணத்தில்
தாத்தாவும் அப்பாவும்
கடந்துபோன
தடங்களிலே
இன்று
தட்டுத் தடுமாறி நான்

நாடி தளர்ந்து
நடையும் இழந்தவனாய்,
பொறிகள் செயலிழக்க,
பொக்கை வாய்பிளந்து
விழிகுத்தி வெறிக்கின்றேன்

திசையறியா வனம்புகுந்த
ஏதிலிபோல்
நினைவுகளோ
எங்கும்
அலைந்தலைந்து
வருந்தித் தளர்வுருமே!

ஓயாத பேச்சு
உள்மனதில்
நீங்காத ஆசைகள்
ஆழ்மனதில்

வாங்கிக் குவித்த
பொருளெல்லாம்
வீட்டில் நிறைந்திருக்க
கிடக்க இடமின்றி
கொட்டிலை ஒதுக்கினர்

வயோதிகம் என்பது
துடுப்பா! படகா!
எனக் குழம்பிய
தூக்கமற்றப் பின்னிரவில்
சுழித்தோடும் பெருவெள்ள
ஆர்ப்பரிப்புத் தாலாட்ட
மெல்லக் கண்ணயர்ந்தேன்

நானே துடுப்பாகி
நானே படகாகி
நானே நதியாகி
ஆழ்கடல் அயர்கின்றேன்

- மலையருவி

Pin It