ராஜ குருக்களின்
ஆட்சியில்
கோரைப் பற்களை நீட்டி
மக்கள் குடல் கிழித்து
இரத்தம் குடிக்கும்
சிம்மாசனம்

உடைவாள் ஏந்திய
பெருமிதத்தில்
சித்தம் கலங்கி
சொந்த தேசத்து மக்களையே
வேட்டையாடும்
சிப்பாய்கள்

நர்த்தகிகளின்
நவரச ஆட்டத்தில்
மெய்மறந்த சேனாதிபதிகள்

அறுசுவை விருந்தில்
போதை தலைக்கேற
தலைக்கறி கேட்கும்
தூதுவர்கள்

குடியிருப்புச் சுவர்களில்
காதுகளைப் புதைத்து
ஒட்டு கேட்கும்
ஒற்றர்கள்

தேசபக்த கோட்சேக்களின்
பஜனைகளில்
மெய்மறக்கும் இராசமாதா

ராஜாதி ராஜ..
ராஜ மார்த்தாண்ட..
என்று நீட்டி முழக்கும்
ஊடக விதூஷகர்கள்

தர்பார் மண்டத்தில்
முதுகெலும்பு உடைந்த
தலையாட்டி பொம்மைகள்

இந்த
மகத்தான ராஜ்ஜியத்தின்
எல்லைகள்
மேலும் மேலும் விரியும்
சுடுகாடுகளாய்… 

- மலையருவி

Pin It