வெயிலின் இதம் வேண்டி
ஊறுகாய் ஜாடிகள்
மையங்கொண்டிருக்கும்
இந்த முற்றத்தில்
ஊடாடிக்கொண்டிருந்தது
முன்பொரு காலத்தில்
ஓர் ஊஞ்சல்
குடியரசோ சுதேசமித்ரனோ
பெரியசாமி வாசித்துக்கொண்டிருப்பதை
வாசல்வரை வந்து சொல்லும்
க்ரீச்சொலி
நிரம்பிக்கொண்டிருக்கும்
பத்தாயத்தின் உள்ளிருப்பில்
விளைச்சலின் ஏகபோகத்தை
விரல் மோதிரம்தான் எடுத்துரைக்கும்
நெல்லின் உரசலில்
பளபளத்து கிடந்த மரக்கால்
இப்பொழுது பரணில்கூட இல்லை
க்ரீச்சொலி தொலைந்துபோன வீட்டில்
காய்ந்துபோன மலர்மாலை
ஊஞ்சலாடுகிறது
பெரியசாமி படத்தில்.
- ஆ.மீ.ஜவஹர் (