எந்தக் கேள்விக்கும் சிரிப்புதான்
காலம் நேரம் தேதி எல்லாமே சிரித்தல்தான்
காற்றை நன்கு சிரித்துணர்வான்
வெயிலை நன்றாக சிரித்து வாசிப்பான்
மரம் செடிகளுடன் சிரிப்பது
நன்றாக இருந்திருக்க வேண்டும்
முகம் பூரித்த புன்முறுவல் அவனிடம்
அடிக்கடி தோள் குலுக்கி உதடு பிதுக்குவான்
சொல்ல வருவதை நிறுத்தும்
புதுவகைப் புன்னகை அது
அவன் செந்நிறக் கூந்தல் காற்றில்
மினுமினுப்பதுகூட சிரிப்பது போலத்தான்
அவன் அசையும் பூக்களிடம்
சிரித்துக் கொண்டிருப்பான்
அவனிடம் பேச்சுக்கள் இல்லை
சிரிப்பிருந்தது
வகை வகையான சிரிப்புகள் இருந்தன
அவன் தொடர்ந்து சிரித்தான்
வானம் பார்த்து சிரித்தான்
நாலைந்து மழைத்துளிக்கு கை ஏந்துகையிலும்
அவனுக்கு சிரிப்பு நிற்காது
கைவிட்ட கையொன்றின் வளையல் சத்தம்
எப்போதாவது வரும் சிரிப்பிலிருக்கும்
கொலுசொலியின் குளிர்சிரிப்பை
ரகசியமாய் செய்து பார்ப்பான்
ரயில் சிரிப்பு கேட்கையில் மட்டும்
காது பொத்தி கால்களில் சிரிப்பான்
நாள் சோர்ந்து இருப்பிடம் திரும்புகையில்
அவன் சாதியைப் பட்டியலிட்டு
அவனை சாகடித்து சிரித்திருந்த
அவன் கல்லறை உடல் திறந்து கிடக்கும்
சிரித்துக் கொண்டே உள் சென்று
ஒடுங்கிக் கொள்வான்
பிறகு மெல்ல விசும்பல் சத்தம் கேட்க ஆரம்பிக்கும்
அது மொத்த சிரிப்புக்குமான பதிலாக இருக்கும்

- கவிஜி

Pin It