பொதுவில் நின்று கத்துகிறேன்
பூகம்பம் என நீ நம்பக்கூடும்
நீ கல் எறியவே மரம் வளர்க்கும் நான்
நீ சொல் எறியவே மனதையும் வளர்க்கிறேன்
என்னைத் தோற்கடிக்க துடிக்கும்
உன் ஆசை உரைக்கிறது
என்னைப் போல நடிக்கும்
உன் பேராசை குரைக்கிறது
நான் என்பதை வெறும் நீ என்று நினைத்தாயோ
தான் என்பதை தான் நான் என்றும் நினைத்தாயோ
என் ஒற்றை வரி தவம் பற்றி தெரியுமா
என் இரவும் பகலும் கூர்வாள் முனை
என்பதுதான் அறியுமா
தானாக பேசித் திரியும் நடைப்பயிற்சி
அதற்கும் அப்பாற்பட்டது புரியுமா
மலை உச்சியில் மணிக்கொரு தரம் நிகழும்
என் தற்கொலை தான் நிறையுமா
எழுதுகோளால் எழுதுபவன் அல்ல நான்
இதய வால்வால் எழுதுபவன்
எழுத்துக்கு சாகும் பிறப்பு எனக்கு
வாக்கியத்தில் வாழும் இறப்பு எனக்கு
மண்டை குழம்பி ராத்திரி கடைந்து
அதிகாலை எழுந்து வானம் பார்
முதல் பறவைக்கு என் சிறகுகள் தான்...!

- கவிஜி

Pin It