வண்ண வண்ண உலகம் வாய்த்திருக்கிறது
தோகை விரித்தாடுகிறான்
பலூன்காரன்

*

பத்து ஜோடி கண்கள் அவளுக்கு
பதற அடித்து விட்டாள்
கெடா மீசையோடு அம்மணமாக நின்றவனை

*

தீக்குளித்து நிரூபித்து
உயிரோடு வந்த சீதை உடலில்
ராம வாசம் சகிக்கவில்லை

*

கூலியில் கை வைக்கும்
பண்ணைக்காரன் காட்டில்
குருவிகள் தானியம் பொறுக்குவதில்லை

*

புலியோடு காத்திருக்கிறது கதை
மானை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறான்
கதை கேட்கும் சிறுவன்

*
இருட்டின் கடைசி துளியென
விடியலின் முதல் காகம்

*
'எழுதிட்டே இரு' என பொம்மையை
கட்டிக் கொண்டு தூங்கும் உன்னை விட
பெருங்கவிதை
இவ்விரவில் வாய்க்கப் போவதில்லை

*
மரண பயம் கடவுளை நோக்கி
ஓட வைக்கிறது
மானுட நேயம் புத்தகம் நோக்கி
நகர வைக்கிறது

*
கவிதை செய்யும் கூட்டம்
உவமைக்கு அலைகிறது
கவனம் பட்டாம்பூச்சிகளே

*
நுனிப் புல்லில்
பனியாகிறேன்
துணை புல்லென கனியாகு

- கவிஜி

Pin It