பூமிப் பந்து முழுவதிலும்
நிரம்பியிருப்பது
சுவாசக் காற்று அல்ல
நேசக் காற்று
என்று நினைப்பவள்
அவள்

மலைகள் வனங்கள்
கடல்கள் உயிர்கள்
எல்லாம்
காதலின் வெளிப்பாடு
அவளுக்கு

பாசத்தோடு
பரிமாறப்பட வேண்டிய
அவள் இலைகளில்
சலிப்பு தருகிறது
மிதமிஞ்சிய உணவு

மண்ணின் ஆழம்வரை
தழுவிக் கிடக்கிறது
தண்ணீர்
ஆன்மாவின் கூட்டை
தொட மறுக்கும்
காமம்

படர்ந்து கிடக்கும் கொடிகளில்
உணரப்படும் அன்பில்
கொடிகள் படரும் கொம்பாக
உருமாறுகிறாள்
நீரற்றுக் காய்ந்து போகின்றன
அவளுக்கான கொடிகள்

மின்சார விளக்குகள்
நட்சத்திரங்களாகிவிடும்
தருணத்திற்கு
காத்திருக்கும் பொழுதுகளில்
சூரியன்கள்
முளைத்து விடுகின்றன

மனித சுவாசம் தீண்டாத
இயற்கையில் அவனோடு இருப்பதாக
கனவு கண்டு கொண்டிருக்கும் போதே
விழித்திரைகளிலிருந்து
விலகி விடுகிறான்

வார்த்தைகளின் ஊடாக
முரணைக் கண்டடையும்
அவனுடனான உரையாடல்கள்
வெறும் ஒலிக்குறிப்புகள்

கருவறைகள்
புதைகுழிகளாக மாறி விடுகின்றன

காதலைப் புதைத்து
கல்லறை கட்டிக் கொண்டிருக்கிறாள்

கான்கிரீட் இடைவெளிகளில்
உயிர்த்து
நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது
காதல் விருட்சம்

உலகம் தீர்ந்து முடிவதற்குள்
ஒரு பறவையின் கூடாவது
சாத்தியப்பட வேண்டும்

- முனைவர் சி.ஆர்.மஞ்சுளா

Pin It