ஒவ்வாததை வைத்துக்
கொண்டிருப்பது
ஆப்பிள் விழுமென்று
காத்திருப்பது தான்

கால் நீட்டவும் மறந்து போன
தியானம்
பசி போக்கவில்லை

சருகொன்றின் உடைதலை
ரசிக்கும் என் குரூரத்தை
மரநிழல் முனங்கிச் சொல்கிறது

சீரான இடைவெளியில்
விழுந்து கொண்டேயிருக்கும்
இலைகளில் பழுத்தவை தான்
ஞானம்

சொல் நடுங்குகையில்
மாலை தாண்டியிருந்தது
சொல் அற்ற போது இரவும்
தாண்டியிருந்தது

ஒற்றை மரத்தடியில் ஒற்றைக்கண்
திறந்தே கிடக்கிறேன்
தவம் என்றெல்லாம் போட்டுத்
தாக்காதீர்கள்
புத்தன் யுத்தன் என்று சமாதி கட்டி
விடாதீர்கள்

கோபித்துக் கொண்டு வந்தவனை
அழைத்துச் செல்ல எப்படியும்
வந்து விடுவாள் மனைவி...!

- கவிஜி

Pin It