டி.என் பாளையத்தின்
முச்சந்தியிலிருக்கும் டீக்கடையில்
கேசவனும் நானும்
ஒரு டீ ஒரு காஃபி சொல்லி
ஆறுகிற வரைக்கும் பழங்கதை பேசி
மெல்லப் பருக முனையும் நேரத்தில்
இதுவரை
வாழ்ந்ததைக் கணக்குப் போட்டால்
ஒரே கால்குலேட்டரின் பொத்தான்களால்
நம் வாழ்க்கை சொல்லப்பட்டுவிடுமென
வியாக்கியானம் மொழிந்து கொண்டிருந்தபோது
நேருக்கு நேராய்
சரக்கு லாரியின்மீது ராயல் என்பீல்டு
மோதியது;
சூடிறங்கிய விரல்களின் வழியே
திடுக்கிடும் பயம் பயணப்படுகையில்
எங்கள் இருவர் கால்களின்
இடைவெளியில்
தொப்பென்று விழுந்தது
ஒருவனின் மூளை;

அடுத்தடுத்த நொடிக்கு முன்னரே
நாங்கள் உதவிக்கு கரங்கள் நீட்ட
இரத்தம் தோய்ந்திருந்த ஹெட்செட்டின் ஒயர்
அறுந்து போயிருந்தது;

ஆம்புலன்சுக்கு அழைத்து
ஆஸ்பத்திரியில் சேர்த்து
சிகிச்சைப் பலனின்றி உயிர்பிரிந்தது;

எல்லாம் முடிந்து
காவல் நிலையத்தில்
கையெழுத்துப் போட்டுவிட்டு
சோர்ந்தபடி புங்க மரத்தடியில் நின்ற
அந்த வாகனத்தின்
வலது கண்ணாடியின் தலையை
மூடியிருந்த தலைக்கவசத்தில் புறங்கை முட்டியை
ஊன்றியபடி விழிநீர் துடைத்தான்
அவனின் மகன்;

பாவமாய் ஒரு பார்வை செலுத்தி
அவன் முதுகு தட்டி அணைக்க
ஸ்பீட் மீட்டரின் மேல் ரெண்டாய்க் கிடந்தது
அந்த ஹெட்செட்.

- திருமூ

Pin It