அவன் ஊதும் சிகரெட் புகை
தொப்பூழ்க் கொடியென
மேலே வளைந்து செல்கிறது.
மேகத்துக்குள்ளிருந்து
யாரோ பிரித்தெடுக்கிறார்கள்
அவனையும் அவனது தாயையும் .
பனிக்குடம் உடைந்து
மழை கொட்டுகிறது வீதியெங்கும்
கடைவாசலில் ஒதுங்கும் குழந்தைகள்
அனைத்துப் பற்களும் சிரிக்க
அவனை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.
மழையில் மிதக்கும் இறந்த பறவை
தனித்தனி இறகாகப் பிரிகிறது
ஒவ்வொரு இறகிலும்
பறக்கும் உயரமும்
வானத்தின் பாதையும் அச்சிடப்பட்டிருக்கிறது.
நள்ளிரவில்
கால்களை அமுக்கிவிடும் தந்தை
பாதங்களிலிருந்து சாலைகளை வரைந்து
வீட்டு வாசல் கடந்து
தெருவில் தொலைக்கிறார்.
கனவில் அவரது கைகளைப்
பிடித்துக் கொண்டு
நடக்கும் அவனது
கையிலிருந்து
சொட்டும் மதுத்துளிகள்
மணலுக்குள் புதைந்து
ரகசியங்களைத் தொட்டெழுப்புகின்றன.
தாயின் முகம் வரைந்த
கண்ணாடியை எடுத்து வருவதாக
சொல்லிச் சென்ற தந்தை
திரும்ப வரவே இல்லை
மழை மட்டுமே வருகிறது.
வீட்டுக்கு வந்து பார்க்கும் போது
அவனையும் காணவில்லை
மழை தோன்றுமிடம் பார்க்க
சென்றதாய்க் கூறினார்கள்.
ஆகாயத்தில்
அப்படி என்னதான் இருக்கிறது
அவனுக்கு?

- இரா.கவியரசு

Pin It