"ரகசிய அறிக்கைகளை
யாரோ படிக்கிறார்கள்"
தூரத்திலிருந்து வருகிறது
அரூப விசில்.
துடிக்கும் விலாவில்
சிறுத்தையை வரைகிறது அட்ரீனலின்.
மூடியபடி இறங்கும் லிப்டிலிருந்து
மேலே வருகிறது
ரகசியங்களின் புகை
ஓடு! ஓடு!
துரத்துகிறது சிறுத்தை
யாருமற்ற தரைதளத்தில்
பூந்தொட்டிகளை ஏற்றுபவர்கள்
பூக்களை நீட்டுகிறார்கள்.
மெல்லிய ஒலியெழுப்பும்
ஜெராக்ஸ் மிஷின் அறைக்குள்
திறந்திருக்கும் கண்ணாடித்திரையில்
கமழ்கிறது ரகசியங்களின் வெப்பம்
கண்களை உள்ளே வைத்து
பச்சை ஒளியை நகர விடுகிறேன்
மீண்டும் மீண்டும்
என் கண்களின் நகல்களே கிடைக்கின்றன
இடைவிடாமல் ஒலிக்கிறது தொலைபேசி
ரகசியம் பேசும் குரல்வளைகளை மூடி
ஒவ்வொரு ஒலியாகத் துண்டிக்கிறேன்
நிசப்தத்தில் ஏதோ பரிமாறப்படுகிறது.
ரகசியங்களைப் பாதுகாக்க ஆரம்பித்த பிறகு
இம்சிக்கின்றன வளைவுகள்
ஒவ்வொரு முறையும்
யாரோ ஒருவர்
பின்தொடர்ந்து வருகிறார்.
உறக்கத்திலும் சுழலும் 360 ° சைரன்
கனவுகளில் ரகசியங்களைப் பேசும்
பிடிக்க முடியாத முகங்களை நோக்கி
ஓடிக் கொண்டே இருக்கிறது.
சோர்வுற்று தூங்க மடி தேடுகிறேன்
ரகசியங்களை உருவாக்கியவர்கள்
காகிதங்களைத்
துகள் துகளாக அழிக்கும்
மிஷினுக்குள் நுழைந்து
ரகசியங்களை அழித்து விட்டு வா
என்று ஆணையிடுகிறார்கள்.

- இரா.கவியரசு

Pin It