புற்றுக்கு பால் ஊற்று
பாம்புக்கு முட்டை வை
சாலையெல்லாம் தேங்காய் உடை
சக மனிதனை கோயிலுக்குள் விடாதே
செத்தாலும் சுடுகாட்டுக்கு வழி தராதே
வண்ண வண்ண கயிறு கட்டி
வகையறாவை வாழ வை
பொம்பளைய வீட்டோடு இருக்கச் சொல்
காசு வாங்கிட்டு ஓட்டு போடு
அடிச்சுப் பிடிச்சு வேட்டி அவிழ
சரக்கு வாங்கு
சாமிய ஊரெல்லாம் இழுத்து
ஆம்புலன்ஸ்க்காரனுக்கு இம்சை குடு
அடிபட்டுக் கிடந்தாலும் செல்பி எடு
உதவிக்கு எவனாவது வருவான்
எதுக்கு வம்புனு எட்ட நில்லு
ஆண்ட பரம்பரைன்னு
ஜப்பான்காரன் பைக்ல எழுதிட்டு
வறட்டு வறட்டுன்னு வண்டி ஓட்டி காதக் கிழி
வண்டி ஓட்டிக்கிட்டே ஒரு காதுல
வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிச்ச
செல்போன்ல தமில் தமில்ன்னு
பெருமை பேசு
எதுத்து கேள்வி கேட்டா
எங்ககிட்ட வாங்கித் தின்ன நாய்க்கு
ரோஷத்தைப் பாருன்னு விரட்டி விரட்டி வெட்டு
தங்கச்சி காதலிச்சிட்டா கொண்டாட்டம் தான்
குத்திக் கூறு போட்டுட்டு
தலை நிமிந்து ஜெயிலுக்குப் போ
செத்தாலும் தனி சுடுகாட்டுக்குப் போய்
மீசை முறுக்கிட்டே உறுமு
ஐந்தில் வளையாதது அம்பதில் வளையவா போகுது
அம்பதுல வளைஞ்சாலும் அஞ்சறிவுக்குப் புரியவா போகுது....!?

- கவிஜி

Pin It