இரவின் முடிச்சினுள்
சிக்கிக் கொண்டது வெளிச்சம்.

திணறும் வெளிச்சத்தைக் காப்பாற்ற
புதிய வெளிச்சம் உருவாக்கினேன்.

முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டு
பரவி நின்றது வெளிச்சம்.

மன்னிப்பு வேண்டி இருள்
நிழலாய் பணிந்தது
கால்களின் கீழ்.

வெளிச்சம் முன் நிற்க
விழுந்து கிடக்கிறேன்
நான்.

*

இருப்பு
இருப்பின் அவசியம், அவசியமின்மை
அறியா குழந்தைப் பருவம்

இருப்பின் அவசியம் கட்டாயமானது
காளைப்பருவம்

இழப்பும் ஏமாற்றமும் நிதர்சனமானபின்
கேள்விக்குறியானது என் இருப்பு

வலிகளை
காலம் அடித்துச் செல்லும்
சுகங்களை
வருந்தியேனும் சுவைக்க வேண்டும் என்றார்கள்
கருதுகோளானது இருப்பு

வாழ்தலுக்கான என்
இருப்பு இறுதியில்
இருப்புக்காக வாழ்தலாயிற்று.

- மா-னீ

Pin It