காமத்தின் சூது
நிச்சயம் தலை வாங்கும்
வக்கிர புத்திரர்கள்
வாழ்வின் பெரும் பிழைகள்
இருட்டென்பதே அட்டுழியம் 
என்றெண்ணி ஊர் கெடுத்தல் 
எப்படி பார்க்கினும் தர்மமாகாது
சிறு பிள்ளைகள் பெல்ட்டடியோடு 
படுக்கையில் உயிரோடு 
சாவதெல்லாம் பேரிடி செய்திகள்
இளங் கனவு கலைத்த வேட்டை மனிதர்கள்
உடல் விதி கலைத்ததில் அதிகார விளையாட்டும்
பகீர்தனங்களின் ஓநாய் கூட்டத்தில்  
பிண்டங்களின் நாற்றம் 
படம் பிடித்துக் காட்டுவதெல்லாம் 
பிறை நிலா சுரண்டல்கள்
வேறு வழியே இல்லை பலி ஆடுகளே
காட்டிக் கொடுங்கள்
கழுத்துவரை குறி நீண்டவர்களை 
கண்டந்துண்டமாய் வெட்டுதல்தான் முறை
அப்பன்களின் அடி வயிறு ஆறுமோ அப்போதேனும்
அலைபேசியில் ரத்தக்காட்டேரி
பல் நீண்டு திரிவது தெரிகிறதா இப்போதேனும்.....! 
 
- கவிஜி
Pin It