போர்களின் போது
மனிதம் சிந்திப்பதில்லை.

வெற்றி குறித்த
போதனைகளும் பொய்களும்
திசையெங்கும் பரப்பப்படும்.
சிதைந்து கிடக்கின்ற உடல்கள் பற்றியும்
பிய்ந்து தொங்குகின்ற சதைகள் பற்றியும்
பாலியல் தாக்குதலில் இறந்த/இருக்கின்றவர்கள் பற்றியும்
கிழிந்து போன குழந்தைகள் பற்றியும்
எதிர்காலம் கேள்வியான குழந்தைகள் பற்றியும்
நிர்மூலமான குடும்பங்கள் பற்றியும்

யாரும் கரிசனை கொள்வதில்லை.

யுத்தக் கடல் கிளிஞ்சல்களாக்கிவிட்ட
வாழ்வியல் ஒவ்வொரு மனிதரையும்
வனப்பிழக்கச் செய்யும்.

அங்கே வெற்றி ஒன்றே
இறுதி இலக்காகும்.
கூடி வாழ்தல்
குதுகலாமாக இருத்தல் பற்றிய
அனைத்தும்
மரணம் குறித்த தத்துவமாக
வலுவிழந்து போகும்.

யுத்த காலத்துப் பேரொலிகளின் காதில்
அமைதிக்கான மெல்லிசைகளின்
குரல் கேட்பதில்லை.
வென்றவர்களின் பக்கமும்
தோற்றவர்களின் பக்கமும்
வெற்றி வெறி ஒன்றோ போதிக்கப்பட்டிருக்கும்.

வென்றவர்கள் கொண்டாடுவர்
தோற்றவர்கள் அனுஷ்டிப்பர்.

(சிலவேளை)
இன்னும் சில நூறு நூற்றாண்டுகள்
கடந்த பின்
பரிணாமம் அடையாத இந்த மனித குலத்தை
எள்ளி நகையாடிபடி வரலாறு படிக்கும்
ஒருவகை மனித இனம்.

இப்போதும் எங்கோ
ஓர் தேசியம்/அடையாளம்
போருக்கு பயின்று
கொண்டிருக்கும்.

- புருஷோத்

Pin It