காற்றில் எதையோ
அசைக்கும் சிறு பூச்சிகளுக்கு
நேர்கோடுகள் இல்லை

வந்து விழுந்து
எழத் தவிக்கையில்
குளுகுளு கொடூரம் அதற்கு

புள்ளி அளவு புத்திக்குள் நங்கூரமிட்டு
நடனமிடும் நாட்டிய கால்களில்
இருக்கலாம் நாலைந்து ஊசிகள்

குரல் மாறி குணங்குலைக்கும்
நெற்றிக்குள் நீச்சலடிக்கும்
சிறு வழியில் நீக்கமற வெஞ்சூடு

புருவம் பரபரக்கும் மூளை குறுகுறுக்கும்
நீயென்ற தானுக்குள் தாங்கொணா
சொல் ஒன்று நம நமைத்துத் தவிக்கும்

குளங்களாகி விடும் கண்களின்
நெருப்பில் நீரோடு போராடி
மிஞ்சுவதெல்லாம் சாவுதான்

மீள் ஞாபகக் குறியீடாய்
மூக்குறிந்து முகம் துடைத்து
கிளம்புகையில் சிறு மரணம் நிகழ்த்திய
கண்களில் வார்த்தைகள் இல்லை
கவனமாய் சிமிட்டும் படக் படக் மட்டுமே ....!

- கவிஜி

Pin It