எமோஜிகளால் சிரிக்கிறீர்கள்
அழுகிறீர்கள் ஆர்ப்பரிக்கிறீர்கள்
முகம் பார்ப்பதுண்டா கண்ணாடியிலோ
கனிவான கண்களிலோ

வடிவேலுவாக வாழத்தான்
உங்களுக்குப் பிடித்திருக்கிறது
இன்னொருவராக இருப்பது
வால் பிடித்தல் வாள் பிடித்தலல்ல

மீம்ஸ்களில் உருண்டு புரள்வதெல்லாம்
வாழ்வென்று நினைக்கிறீர்கள்
மெமரிகளில் வாழ்ந்து விட
மீம்ஸ்களைவிட மிக சிறந்தது
பேரன்பு தான்

எப்போதும் நக்கல் நையாண்டி
புறம் பேசுதல் பொறாமை புறக்கணிப்பு
எப்போதாவது உங்கள் அகம்
நோக்குதல் உண்டா அங்கே கதை கொண்ட
யுகம் கண்டதுண்டா கனவான்களே

எழுத்துப் பிழைகளை
களைந்து விடலாம்
உங்கள் எண்ணப் பிழைகளை

கலாய்த்தலின் வழியே நீங்கள்
சென்றடைவது
கண்டிப்பாக சிண்ட்ரெல்லாவின் ஊர் அல்ல

விர்ச்சுவல் தோற்ற மயக்கம்
படைப்பாற்றலுக்குதவாது
நீங்கள் எட்டிப் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்
நான் எட்டப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

குறுகுறுக்கும் உங்கள் வயிறு
சாம்பார் ரசத்துக்கு யுத்தமிடுகிறது
தமிழ் பசித்த எம் கவிதை இப்படி முடிகிறது
"இருந்து விட்டு தான் போகட்டுமே
எனது சர்ரியலிசத்தோடு
உங்கள் சாம்பார் ரசமும்...!"

- கவிஜி

Pin It