அணைத்தும் வைக்க முடியாமல்
அருகினிலும் வைக்க முடியாமல்
அடிமடியில் புடைத்துக் கொண்டிருக்கும்
நீள்செவ்வகக் குறியென
இவ்வலைபேசி புணரலுக்கு
நேரம் காலமில்லை

கழுத்தறுபட்ட
சீக்கு கோழியின் குரலில்
வந்து வந்து அதிரும் செய்திகளில்
செத்து செத்துப் பிழைக்கிறது கால நாளம்

கிளறி எடுக்கும் மாயத்தை
யாதும் அறிந்தே செய்கிறது
தன்னிச்சையாய் முன்பொரு
காலத்தில் எழுதிக் கொண்டிருந்த
விரல்கள்

கொட்டிக் கொண்டேயிருக்கும்
குப்பைகளோடு கடைசிக் குப்பையையும்
ஜீரணித்து முடிக்கையில்
கோழித்தூக்கம் கண் கொத்திப்
பிடுங்குகிறது

பிறகு கனவெல்லாம் அண்டர்வியர்
அணியாத ஆண்டிராய்டு
பல்லிளிப்புகள் மட்டுமே...!

- கவிஜி

Pin It