ஒரு சொந்தவீடு
அதில் ஓர் அறை
எனக்கே எனக்கென்று...

ஒழுங்காக்கி வைத்தவை
ஒன்றுமே கலையாமல்
அப்படியே இருக்க வேண்டும்..

எழுத ஒரு மேசை...
எடுத்து வைக்காமல்
விரித்த ஏட்டில் மீதி
தொடர வேண்டும்..

வரைய ஓர் சிறுமாடம்
வண்ணங்கள் குழைத்தபடி
எண்ணும் போது
தூரிகை நடம்புரிய வேண்டும்..

கலைப் பொருட்கள்
கண்பார்த்ததை
கையால் செய்து கொள்ள
மூலையில் ஒரு
முக்கோணம் போதும்...

கழற்றி வைத்த
கண்ணாடியும் வளையலும்
கண்முன்னே கிடைக்க வேண்டும்...

தென்றலும் ஒளியும்
சேர்ந்தே பிணைகிற
சின்ன அறைத் தனிமை வேண்டும்...

இவையெல்லாம் கிடைக்கும்
சித்தாரா சொன்னாள்..

இவையெல்லாம்
என்னிடம் உண்டு..

கலைத்துப் போடக்
குழந்தைகளில்லை...
நீண்ட தனிமையில்
நிமிடம் வருடமாகிக் கடக்கும்..
வெறுமை சூழ்ந்த
விரக்தியில் மனம் கனக்கும்..
நாளைய பொழுது
யாருக்காக என்பதுபோல்
இருக்கும்...

சில பொழுதுத் தனிமையே சுகம்...
சிந்தித்தால் கலகலக்கும் வீடே
வரம்...

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

- மகிழினி காந்தன்

Pin It