மழை சொட்டு சொட்டாய்
பேருந்து சாளரத்தினுள்
மௌனத்தை இறக்கிக் கொண்டிருக்கிறது..
 
கிழித்துக் கொடுத்த பயணச்சீட்டு
விடுத்து வந்த உரையாடல்களையும்
மறுத்து வந்த அன்புகளையும்
ஒரு சேர உள்வாங்கி
நனைந்து பெருத்துக் கொண்டிருக்கிறது..
 
விளக்கமற்ற ஓர் மௌனத்தின் எல்லையில்
நான் நானெனவும்
நினைவுகளும் நானெனவே நிறைக்க
உறக்கத்தை முழுக்க
தின்று கொழுக்கின்றன,
சுயம் மறந்த பொழுதுகள்..
 
விழிகள் முழுக்க எதிர்பார்ப்பும் 
கூடை முழுக்க வாழைப்பழங்களுமாய் 
"ரெண்டு பழம் வாங்கிக்கப்பா"!!
ஒரு வாஞ்சையான குரல்
தட்டி எழுப்பி விட,
இன்னமும் சொட்டு சொட்டாய் மழையை
விற்றுக் கொண்டுதான் இருக்கின்றன 
மௌனத்தினூடே சாளரக் கம்பிகள்..
 
 - தேனு
Pin It