அனிதாவிற்காக
ஆயிரம்
குரல்களையும்
ஆயிரம் ஆயிரம்
கைகளையும்
உயர்த்திட முடியும்.
வெறுமையை
சலிப்பை
விரக்தியை
கோபத்தை
தீவிர கொதிப்பை
ஒவ்வொரு உள்ளறைக்குள்ளும்
கிளர்ந்தெழும்
சூடத்தீயை
ஒரு மாயக்காற்று
சாய்த்து செல்கிறது.
அதுதான்
எம் வாழ்வின்
போராட்ட திசையை
மாற்ற வைக்கின்றது.

அதன் ஊஞ்சலில்
ஆடுவதையும்
அயர்ந்து
ரசிப்பதையும்
முதுகில் மட்டுமல்ல
மூளையிலும்
சொருகிவிட்டோம்
அதனால் தான்
மூங்கில் காடுபோலன்றி
முள் காடுபோல்
அன்றே எரிந்து
அன்றே அணைந்து விடுகிறோம்.

எரிந்த பின்
சிதறுண்டு
பறக்கும்
சாம்பல் போல்
காற்றின் விழியில்
கலங்களை
சமைக்கும்
இம்மி துகளாய்
ஒவ்வொரு மனத்தின்
வாசலிலும்
வெளியேறாத
ஒரு போர்
அனிதாவிற்காய்
நடந்து கொண்டிருக்கிறது.

உயிரின் படையல்
என்பது
அத்தருணத்திற்கான
ஒரு சாம்பிராணி புகை
எழுந்து சீறிய பின்
அலை உயிர்ப்புடன்
ஒரு பெருக்கை
உருவாக்குகிறது!

அதிகார வசனத்தின்
முற்றுப்புள்ளி நாம்
வசனங்கள் வருமிடத்தில்
முற்றுப்புள்ளியாக
முகம் குப்புற விழுகிறோம்!

சிறுமையானதால்
சிலருக்கு சிலாகிக்கத்
தெரியவில்லை
நீர் எழ எழ நீளும்
தாமரையாக
அடுத்து வரும்
அனிதாவிற்காக
ஆயிரம் எழுச்சியை
எழுதுங்கள்

- ஜெ.ஈழநிலவன்

Pin It