Ahalya 242முதிர்ந்தவனுக்கு வாய்த்ததை விட
முதிர்கன்னியாய் இருந்திருக்கலாம் நான்!
தவம் என்ற நினைப்பில்
தன்னை மறக்கப் போராடுபவனுக்கு
என்னை நினைக்க இதயமேது?
இறுக்கி இறுக்கி ஒளித்து வைத்தது
அவ்வப்போது
முறுக்கி வெளிவருகையில், அதை மட்டுமே
பொறுக்கித் தின்று பசியாற வேண்டும் நான்.
விழுந்தால் மட்டுமே விழுங்கிக் கொள்ள
நானென்ன பிச்சைப் பாத்திரமா?
குளிக்கப் போனவன்
என்னைக்
குளிப்பாட்ட வரக் கண்டேன்.
அதிசயமாய் என்றேனும் விழும் மழைத்துளிக்காக
என்றும் போலவே அன்றும்
அகலத் திறந்ததென் மேனி!
இறுக அவனணைக்க, அதில்
உருகத் தொடங்கிய வேளையில்
எனக்கும்
உறைத்தது உண்மை@
ஆனால்
உணர மறுத்து,
உதற மறந்து
உறைந்ததென் பெண்மை.
களவென்று புரிந்தும்
கடைசிச் சொட்டு வரை
குடிக்கட்டும் அந்தப் பூனையென்று
பாத்திரமாய் நானிருந்தேன்
கல்லாகப் போவென்று
சபித்ததாய் கோதமனுக்கொரு
சந்தோசம்
அது
சாபமல்ல, வரம்
உயிரிருந்தும் கல்லாய் உலவுவதை விட
உயிரற்ற கல்லாய் உறைவது சுகம்
இராமா!
வழங்குவதாய் நினைத்து
நான் பெற்ற வரத்தை வழித்தெடுத்து விட்டாய்
முடிந்தால்
கோதமனுக்கு என் காமந்தணிக்கும்
திறம் கொடு!
இல்லையேல்
நான் மீண்டும் கல்லாக வரம் கொடு!

- சி.அருள்

Pin It