கீற்றில் தேட...

அடர் இரவின் பாழுங் கிணறென
திறந்துக் கிடக்கிறது மனது
கைப்பிடியற்ற சுற்றுச்சுவரென
தகித்துப் பொசுக்கும் உணர்வு
சூறாவளியாய் சுழற்றும்
நினைவுகள் தடுமாறச் செய்கிறது
அரவமற்ற பெருங்குரலாய்
தனிமை அச்சுறுத்துகிறது
குதிரை குளம்பொலியாய் கேட்கிறது
கிணற்றுத் தவளைகளின் பேரிறைச்சல்
உருளையான சவப்பெட்டியின்
துருப்பிடித்த ஆணிகளென
நீண்டிருக்கிறது படிக்கற்கள்
செத்துப் போனவனின்
பிணமென அசைகிறது
பாவத்தின் நிழலாய் பனைமரங்கள்
ஆழத்தின் கைப்பிடி நீரில்
பயந்தபடி உயிரோடிருக்கிறது
நிலா

- ப.செல்வகுமார், பெரம்பலூர்