sea and moon at mid night

ஐந்து நாட்டிகல் மைல் தொலைவில் 
மையிடப்பட்ட பத்மினியின் 
கண்களைப் போன்றிருந்த 
இளம்பிராயத்துச் சிறு மீனின் பின்னே
உறுமீன் ஒன்று வால் குழைத்துத் தொடர்ந்தது.
அலையின் சன்னமான சப்தத்தில்,
நீல நீர்ப்பரப்பில்,
காமக் குமிழிகள் எண்ணற்றவை உடைந்தன.
இணைவிழைச்சுக் காலத்தின் 
அத்தனை சௌந்தர்யங்களுடன் 
கடல் தளும்பிக் கொண்டிருந்தது.
கரையிலிருந்து அத்தூரத்தில் நடக்கும்
செவுள் சிவந்த மீன்களின் கலவி 
தன் ஒற்றைப் பாய்மரத்துடன் காத்திருக்கும்
கிழவனுக்குத் தெரியும். 
மீன் கிடைக்காத நாளின் இரவொன்றில்
செழித்து வளர்ந்துவிட்ட 
மத்திகளின் கூட்டமொன்றை 
கனவில் கண்டெழுந்த கிழவன்,
பனியும் நிலவும் ஊடாடியிருந்த வெளியில் நின்று
கடலைக் கண்கொட்டாமல் பார்த்தான்.
உச்ச இன்பம் கண்ட மீனொன்று 
துள்ளி மேலெழும்பியது.
இத்தனை உன்மத்தமுடன் சூல் கொள்ளும்
அந்த மீனை 
அடுத்த மீன்பிடிப்பு காலத்தில் 
பிடித்துப் பார்க்க வேண்டும் என
நினைத்துக் கொண்டான். 
உப்புக் காற்று நெடுநேரம் 
தூங்கவிடாமல் அடித்துக்கொண்டிருந்தது.

- மௌனன் யாத்ரீகா

Pin It