அன்பு என்பது……?

தன்னை நேசிப்பதுபோல்
பிறரையும் நேசிப்பது -
தன்னைக் காத்துக் கொள்வதுபோல்
பிறரையும் காத்திட முனைவது -
தனக்கு நேரும் இன்னலைத்
தான் உணர்வதுபோல்
பிறர் இன்னலைத்
தான் உணர்வது -
தனக்கானத் தேவையைப்போல்
பிறர் தேவையை உணர்வது -
தன் தேவைக்குப்
பிறரை வேண்டுதல்போல்
பிறர் தேவைக்குத்
தான் உதவுவது -
“தான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்”என்னும்
கோட்பாட்டில்
உண்மை மனிதம்
உணர்வை நிகழ்த்துவது.

அன்புடன் அணுகுவது…..?
தூய அழகு மலரைச்
சுவைக்க விழையும்
கண்களைப்போல்
பிற மனிதரைக்
கனிவு முகிழ நோக்கி -
அவர் பேச்சைத்
தெளிவாக, முற்றாக,
மண்ணில் ஊறும் நீர்போல்
செவிமடுத்து உள்வாங்கி;ப் -
பெற்றவர்போல் உணர்ந்து -
மெல்லிய ஒலியில் -
இனிய நல்சொற்களால் -
உள்ளதை உள்ளபடி -
சுருக்கமாய் விளங்கும்படி
உன் கருத்தை உரையாடு -
அன்பின் முதல்படி இப்படி.
மற்றபடி -
அருந்தமிழ் திருமறையாம்
திருக்குறளில் நம்ஆதி
பகவனார் அன்பினைக்
காட்டும்படி பலப்படி.

- குயில்தாசன்

Pin It