நெடுஞ்சாலையோரமாய்
குற்றுயிராய்க் கிடக்கும்
ஒருவனின் குருதி
என்ன நிறமென்று
கூடிக் கூடிப் பார்த்து
செல்லலாயினர்
மக்கள்.
___________________

ஒரு
பிரதான சாலையோரம்
வீழ்ந்து கிடக்கும்
ஓர் இன்றைய பிணத்தை
கடந்து சென்று கொண்டிருக்கின்றன
நாளைய பிணங்கள்.
__________________________

நெடுஞ்சாலையோரம்
அமையப் பெற்றிருந்த
மோட்டலில் பசியாறிய
ஒரு தோசைக்கு
அறுபது ரூபாயென
பில் நீட்டினான் வெயிட்டர்
இனி அங்கு செல்லப் போகும்
எல்லா தடவைகளுக்குமாய் சேர்த்து
என் கைகளை அழுந்தத் தேய்த்து
கழுவலானேன் நான்.

Pin It