வார்த்தையின் இருளுக்கும் பொய்மையின் ஒளிக்கும்
நடுவே ஓடும் தறியில்
பின்னப்பட்ட கதைகள் நம்முடையதா
மாய வலையில் சிக்கிக்கொண்ட
நம் குரல்வளையில்
பாடப்பட்ட பாடல்களெல்லாம்
நம்மைப் பற்றிய பாடல்களா
நம் கவிதைகளில் இடம் பிடிக்காமல்
மரம் இழைத்தவர்கள் பறையடித்தவர்கள் விவசாயிகள்
பானை செங்கள் சுமந்தவர்களெல்லாம் எங்கிருந்தார்கள்
நம் கதைகளுக்குள் அவர்களை வராமல்
செய்தவர்கள் யார்
சூத்திரர்களும் பஞ்சமர்களும்
பாட்டி, தாத்தாக்களும் மூதாதையர்களும்
நம் குழந்தைகளின் கதைகளில் ஏன் வரவில்லை
நம்முடைய பாட்டன் முப்பாட்டன்களின்
வியர்வைகள் எந்த கதையில் இருக்கிறது
பாட்டிகளின் கண்ணீர் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது
இந்த நிலத்தின் கதைகள் எங்கே
நாம் யாருடைய சாகசத்தை சொல்லித்தருகிறோம்
கடவுளின் கதைகளைத் தவிர
நமக்கென்று கதைகள் இல்லையா
கம்பன் ஏன் வடக்கின் கதையைப் படைத்தான்
நமக்கென்று வரலாறு இல்லாமலா இருந்தது
நம் சொற்கள் ஏன் மதத்திற்கு திருப்பிவிடப்பட்டன
நம் ரத்தம் ஏன் கடவுளுக்கு பாய்ச்சப்பட்டது
நம் திறமைகளின் நதியை உறிஞ்சிக்கொண்டது யார்
நம் சிந்தனைகளை கொள்ளையடித்தது யார்
நம் மூளைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதில்
எது நம்முடையது
நம் உடலுக்கு ஒரு பெயரிருக்கலாம்
அது தாய்மொழி தந்ததல்ல
நம் கொண்டாட்டங்களுக்கு ஒரு பெயரிருக்கலாம்
அது தாய்நிலம் தந்ததல்ல
நம் அடையாளம் என்பது மதமா
நம் அடையாளம் என்பது சாதியா
நம்மை விசாரணை செய்வோம்
அடையாளங்களை மறுபரிசீலனை செய்வோம்.
கீற்றில் தேட...
அடையாளங்களின் மறுபரிசீலனை
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்