trainதாமதமாக வரும் ரயில்கள்
தாமாகவே தாமதமாக வருவதில்லை

ஜன்னலோரம் அமரும் பயணிகள்
ரயில் ஓடும்போது மரங்களையும்
நிற்கும்போது உங்களையும் ரசிக்கிறார்கள்

அபாயச் சங்கிலியைப் பார்த்தாவது
அதிக சங்கிலிகள் அணிவதை
பெண்கள் தவிர்க்க வேண்டும்

பயணி ஒருவர்
கழுத்துச் சங்கிலியை
கை விரலில் சுற்றி
பல்லிடுக்கில் கடித்தால்
அது அபாயச் சங்கிலி என்பதை
இளைஞர்கள் அறிக

ரயில் எவ்வளவு புகை விட்டுச் சென்றாலும்
பயணிகள் புகைவிடுவது
தண்டனைக்குரிய குற்றமாகும்

பயணச் சீட்டு இல்லாத பயணிகளை
பரிசோதகர்கள் இறக்கிவிடுவதில்லை
அவர்கள் நுண்பேசியில்
குறுஞ்செய்தி வைத்திருப்பார்கள்

முன்பதிவு செய்த பயணிகள்
பிறருடன் பேசாது வருவதால்
‘ரிசர்வ்ட்’ பயணிகள் என்றும்
பொதுப்பெட்டியில் கலந்து பழகும் பயணிகள்
‘அன்ரிசர்வ்ட்’ பயணிகள் எனவும்
அறியப்படுகிறார்கள்

பொதுப்பெட்டியின் கழிவறையில்
சரியாகக் கழுவிக்கொள்ளப் பழகியவர்கள்
வாழ்க்கையில் எத்தகைய சவாலையும்
எளிதாக சமாளித்துவிடுவார்கள்

உயர் வகுப்பு பெட்டிகளில்
இன்னமும்
உயர் சாதிப் பயணிகளே
அதிகம் பயணிக்கிறார்கள்

மேல் தட்டு
நடுத்தட்டு
கீழ்தட்டு என்று
சமூகத்தைப் பிரதிபலிப்பவையாகவே
ரயில் பெட்டியில்
படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன

இணையாக இருந்தாலும்
இணையவே இணையாத
தண்டவாளங்களில்
அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகின்றன

நானும் அவளும்
அன்று வேறு வேறு பெட்டிகளில்
ஏறியிருந்தால்
இன்று எதிரெதிர் கூண்டுகளில்
நின்றிருக்கமாட்டோம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.