பாம்பு குறித்த
இந்தக் கவிதை
உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்.
சட்டையை
உதறிவிட்டுச் செல்லும்
பாம்பின் லாவகத்தோடு
இக்கவிதையைப் படிக்காமல்
நீங்கள் விலகிச்செல்லலாம்.
இரட்டைப் பிளவுகளோடு
மிரட்டும் நாக்கோடு
உங்களை நோக்கி
படமெடுத்து நிற்கும்
இக்கவிதைக்கு
நீங்கள் மயங்கலாம்.
பாம்பு
போட்டு வைக்கும்
முட்டைகளைப்போல
உங்கள் மனதுக்குள்
இக்கவிதையை
விட்டு விட்டுச் சென்றுவிட்டேன்.
ஆலிங்கனம் செய்தாலும்
அடித்து விரட்டினாலும்
மீண்டும்
ஞாபகத்திற்கு வரக்கூடும்
பாம்புகளும், இக்கவிதையும்.
- ப.கவிதா குமார்