தீராத காதலாய்
என் அருகே படுத்துக் கொண்டிருக்கிறது
என் கவிதை.
என் அறையெங்கும் பரவும்
மேசை விளக்கொளியாய்
நீலப் பரவசமாய்
என் மீசை தடவியபடி
என்னை வாசிக்கின்றது என் கவிதை.
சப்தமற்றுத் திறந்துவிட்ட
என் இரவில்
என் இரகசியங்களைத் துருவியபடி
என்னை அறிய முயல்கிறது என் கவிதை.
மெதுவாய்...மெதுவாய்...
எனக்குள் தானாகிக் கொண்டிருக்கும்
இந்தக் கவிதையை
நானும் காதலிக்கத் துவங்கியபின்தான்
நான் அறியாத வழியினூடாய்
வெளியேறிவிட்டது
பூனையை ஏமாற்றிய எலியின் புன்னகையோடு.