பலமுறை பார்க்கத்தூண்டும்
உனது டீஷர்ட்களில் இருக்கும்
வரிகள் எப்போதும்
மறந்துவிடுகின்றன
***
எப்போதும் மன்னிக்கும்
இடத்தில் இருக்க எனக்கு
விருப்பமில்லை
****
வெளி மாநிலங்களில்
சுற்றித்திரிகையில்
எதேச்சையாகத் தென்படும்
தமிழ்ப் பெயர்ப்பலகைகள்
எதிர்பாரா நேரத்தில்
எனை வியப்பிலாழ்த்தும்
உன் திடீர் வரவை
ஞாபகப்படுத்துகின்றன.
****
ஏதேனும் ஒரு
தவறாவது செய்வேன்
எனக் காத்திருக்கிறாய்
*****
ஒரு
கனியைக் கூடத் தடுக்க இயலாத கடவுள்
இருந்து என்ன பயன் ?!
*****
அவர்கள் குடிக்கும்
ஒரே ஒரு கோப்பை
காப்பிக்காக
அந்த மேசை எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்கிறது
*****
பிரமிளிடமிருந்து
பிரிந்த கவிதை ஒன்று
அனைவர் வாழ்விலும்
ஏதோ ஒன்றை
எழுதிச்செல்கிறது
எக்காலமும்.
- சின்னப்பயல் (