கீற்றில் தேட...

அடிக்கப்போய்
அரண்டு மல்லாந்த
கரப்பான் பூச்சியாய்,
இயல்புக்குத் திரும்பும்
வகையறியாது
சலனங்கள் கீழ்நோக்கிப் பிறாண்ட
தவிக்கிறது என்மனம்

முயற்சியின் தோல்வியில்
கவலைகள்
எறும்புக் கூட்டங்களாய்
மொய்த்துக்
கூடிச் சுமக்கப்
பயணம் தொடங்குகிறது

தேவைக்கும் இருப்புக்குமான
இடைவெளியில்
வாழ்க்கை தொங்கிக் கிடக்க
ஆசையெனும் ஆப்பசைத்து
சிக்கித் துடிக்கிறது
என்மனம்

முயற்சியின் தோல்வியில்
வாலைப் பறிகொடுத்து
குருதி சொட்டச்சொட்ட
ஆசையை வீசி
நடுங்கித் தளர்கிறது

ஊடக விளம்பரங்கள்
உருவாக்கும்
மாய வெளிச்சத்தில்
தொலைத்த வாழ்க்கையை
யதார்த்த இருட்டில் தேடும்
விழியற்றவர்களாய்ப்
பலரோடு நானும்..