என்னை
ஏனோ பிடிப்பதில்லை உனக்கு.
எனது கருப்பு நிறம் நிச்சயம்
ஒரு காரணமாய் இருக்கக் கூடும்.
நிறங்கள்
மனங்களின் புரிதலில்
ஒரு இடையூறாய் இருப்பதை
'வலி' என்ற வார்த்தையால் விழுங்கிக் கொள்கிறேன்.
கசியும் அன்பும்....
உனக்குள் விழுந்துவிட்ட காதலும்...
உன் ஒப்பனை வார்த்தைகளால்
புறக்கணிக்கப்பட்டுவிட-
வீழ்ந்து நிற்கிறேன்
எழத் தெரியாத நிழலென
நான் சுவாசிக்கும் எல்லாக் கணங்களிலும்.
இந்தக் கணத்தில்-
எனக்கு மட்டும் தலைகீழாய்த் தெரியும்
இந்த உலகத்தின்...
அதன் இருண்ட பொந்துகளில்
ஒரு வௌவாலென அடைந்து....
அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்
உன் பிரியத்தின் நம்பிக்கைகளை.
என்றாலும்-
நீ கணங்களில் நஞ்சென உமிழும் கோபம்...
என்னைச் சிதைத்துவிட-
நீ விரும்பாத...
“இன்னொன்றாய்”
வாழ்வதன் வலியை....
எந்தக் கவிதையில் எழுதி வைப்பேன் நான்?