கீற்றில் தேட...

நான் பைத்தியம் ஆக்கப்பட்டிருக்கிறேன்
உன்னால்.
கடற்கரையில் பிரதான சாலைகளிலோ
நேருவீதியின் கடைகள் அடர்ந்த சாலையிலே
சுற்றித் திரியவில்லை.
வாரி முடியப்படாத
ஷாம்பு வாசம் வீசாத
சடை பிடித்த தலைமயிருடன்
கிழிந்த சட்டை அணிந்து
அங்கங்கள் வெளித்தெரியும்படி
நடந்து சென்று
கடைகளின் முன் நிற்கவில்லை.
மார்க்கெட் அருகில்
அழுகிய காய்கறிகளைக் கொட்டும்
குப்பைத் தொட்டிக்கு அருகில் அமர்ந்து
போவோர் வருவோரைப்
புரியாத மொழியில் வசை பாடி
உளறிக் கொண்டிருக்கவில்லை.
அஜந்தா சிக்னலின் ஓரத்தில்
குப்பைகள் அடங்கிய
பெரும் மூட்டை ஒன்றை
யேசுவின் சிலுவையைப் போல
சுமந்துகொண்டு இலக்கற்ற பாதையில்
என் பயணத்தைச் சாத்தியப்படுத்தவில்லை.
இருந்தும்
நான் பைத்தியம் ஆக்கப்பட்டிருக்கிறேன்.
நன்கு விவாதிக்கப்பட்ட அறிக்கையைப் போல
நான் பைத்தியமாக்கப்பட்டதாக
ஆயிரம் முறை நீ
உரத்துச் சொன்ன போது
நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்
வலிகளை எழுதிக் குவிக்கும்
பைத்தியக்காரி நான் என்று.