கடந்து கொண்டிருக்கிறது
என்னை ஓர் இரவு
என் அனுமதியை
முற்றிலும் தவிர்த்தபடி...
இவ்விரவை கட்டுவதற்ககான
கயிறும் என்னிடமில்லை...
இவ்விரவை கட்டுப்படுத்தும்
சூட்சமும் எனக்கு விளங்கவில்லை...
நான் விழித்திருப்பதால்
நிற்கப் போவதில்லை
இந்த இரவு...
நான் விழிசாய்ப்பதால்
கலையப் போவதில்லை
இந்த இரவு...
விடியும் வரை
வீழ்வதாயில்லை
இந்த இரவு...
விடிந்த பின்பும்
நீளும் இதன் கனவு..
கடந்து கொண்டிருக்கிறது
என்னை ஓர் இரவு
என் அனுமதியை
முற்றிலும் தவிர்த்தபடி...
***
அறையின் கதவு
மருத்துவமனை!
அறைகள் மட்டுமில்லை
இவை கதைகளும்
நிறைந்தவை ...
அறையின் கதவின்
இடுக்குகளின் வழியே
கசிந்துகொண்டிருக்கிறது
கதைக்கான வார்த்தைகள்...
ஒருசில அறைகளில்
ஒரு பிறப்பையோ
ஒரு இறப்பையோ
தீர்மானிக்கிறது காலம்...
அனுபவத்திற்கும்
பிராத்தனைக்குமான
இடைவெளியில்
அடைத்தும் திறந்தும்
ஆடிக் கொண்டிருக்கிறது
அறையின் கதவு...
வலி
தண்ணீரில்
எழுதிய எழுத்துக்களோ
கலைந்து போய்விட்டது...
கண்ணீரில்
எழுதிய எழுத்துக்களோ
களைத்துத் போய்விட்டது...