அடிமையின் உழவரின் நிலமிசை உழைப்பும்
மடியிலா வினைஞரின் எந்திர உழைப்பும்
மக்கள் துய்க்கப் பெரும்பொருள் குவிப்பினும்
தக்க முறையில் தருதல் இன்றி
ஏற்றம் பெற்றன ஏய்ப்போர் கையில்
மாற்றம் வேண்டி உழைப்போர் முனைந்தால்
தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி
வேட்கைச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத் திரள் போல, உழைப்போர்
கொண்ட குடுமித்து, இப்புவி யாங்குமே
((அடிமைச் சமுதாயத்தில்) அடிமைகளும், (நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில்) பண்ணை உழவர்களும், நிலத்தில் உழைத்தும், (முதலாளித்துவச் சமுதாயத்தில்) தொழிலாளர்கள் இயந்திரங்களில் ஓய்வின்றி உழைத்தும், மக்கள் துய்ப்பதற்காக அதிகமான பொருட்களை உற்பத்தி செய்து குவித்து இருந்தாலும், அவை தகுந்த முறையில் விநியோகம் செய்யப்படாமல் (உடைமையாளர்களான) ஏமாற்றுக்காரர்களின் கைகளில் சிக்கிவிட்டன. இந்நிலை மாற வேண்டும் என்று உழைக்கும் மக்கள் உறுதியுடன் முயன்றால், மண்பாண்டங்கள் செய்யும் நல்ல மதிநுட்பமுடைய சிறுவர்கள், சக்கரத்தில் வைத்த பச்சைக் களிமண், அவர் கருத்துப் போலெல்லாம் உருவெடுத்தலைப் போல, உழைக்கும் மக்களின் விருப்பத்தைப் போலவே இவ்வுலகம் முழுவதிலும் அனைத்துச் செயல்களும் நடக்கும்.)
- இராமியா
கீற்றில் தேட...
புது நானூறு 32. உழைப்போர் முனைந்தால்
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கவிதைகள்