கீற்றில் தேட...

*
எதன் சாயலையோ ஒத்திருக்கிறது
இந்தப் பகல்
அதன் நீட்சி மிகு இரவு நினைவுகளை
அள்ளிப் பருகியபடி நெளிகிறது கானல்

குமிழ் விட்டு மூச்சென விம்மி வெடிக்கும்
யாசிப்பை
தெருவில் இறக்கி விடுகிறேன்
அது தன் வாலை ஆட்டிக் கொண்டே
முகர்ந்தபடி வாசல்படியருகே வந்து படுத்து விட்டது

எதன் சாயலையோ ஒத்திருக்கும்
இப்பகலில் ஓசையின்றி நீ வந்து நிற்கிறாய் வாசலில்
ஒரு சிநேகப் புன்னகை உதடுகளை விட்டு
இறங்க மறுக்கிறது

இழுத்து கைப்பற்றி விரல்களுக்கு முத்தமிட்டு
அவைகளை இரவல் கேட்கிறாய்

எழுதிப் பார்ப்பதற்கு இந்த ஓர் இரவு மட்டுமே
மிச்சமிருப்பதாக அரற்றுகிறாய்

கொண்டு சென்ற என் விரல்களை
இன்று திரும்பத் தந்த போது
அதன் நுனிகளில் ஒட்டிக் கொண்டிருந்தது
உன் இரவுகளின் மிச்சத் துளி

இன்னும் எழுதித் தீராத
எதன் சாயலையோ ஒத்திருக்கிறது
இந்தப் பகல்

*****

--இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)