கீற்றில் தேட...

அரிதாரம் பூசிக்கொண்டு
வளைய வரும் வயது மீறிய
உன் முதிர் சொற்களின்
மெல்லிய வருடலுடனான
சீண்டலில் தேடப்படுகிறது
நரைத்த கோவலன்களின்
வயதும் வனப்பும்.

எவ்விதக் காரணமுமின்றி
நீட்டித்துக் கொண்ட உன்
முதிர்கன்னி வாழ்க்கை
இரவு  பகல் பேதமின்றி
துணைகள் பலரின்
ஆறுதல் சொற்களில்
நிரம்பி வழியப் போதாதாய்
மூன்றாம் பொழுது தேடி
நகரெங்கும் அலைகிறது.

அலுத்துப் போகாத உன்
சாமத்துப் பேச்சுக்களின் நீளம்
நித்தமொரு கோவலனை
உன் வசப்படுத்துகிறது
எரிக்க முடியாத
கண்ணகிகளின் ஆழ்ந்த
உறக்கத்தில் நீள்கிறது
உனக்கான கன்னி வாழ்க்கை.

-சோமா