தினமும் அரங்கேறும்
நாடகங்களில்
என்ன பாத்திரம்
ஏற்றுத்தொலைப்பது
என்ற குறிப்பில்லா
இவர்களுக்கு
நா தழுதழுத்தது.
நாவுக்கும்
இதயத்திற்கும்
மூளைக்கும்
எந்தவித நரம்புத்தொடர்புகளும்
அருந்துவிட்ட
மகன்களோ
மருமகள்களோ
இருவருமோ
இவர்களுக்கும் இருக்கக்கூடும்
நா தழுதழுத்தது.
உண்ண உடுக்க உறங்க என்றாகிவிட்ட
வாழ்க்கையிலும்
முன்னொரு காலத்தில்
விட்டுப்போன
சில கற்பனை வாழ்க்கைத்திட்டங்கள்
ஒட்டியிருக்கும் தானே?
அதுவும் அருந்தொழிவதில்தான்
மனவேதனை
நா தழுதழுத்தது.
கூத்தைக் கண்டு
கொதித்துப்போன
கடவுளர்கள் யாவும்
மகன்களின்
பூஜையறையில்
படங்களை நேர்விட்டு
பின்புறம் காட்டித்திரும்பி நின்றார்கள்
மகன் கட்டிய மாடி வீட்டில்
வழுக்கி விழுந்த காயம் மட்டும்
வாழ்க்கையின் மிச்சமாய்..
எத்தனையோ பார்த்துவிட்ட
முதியோர் இல்ல முகவருக்கு
இது ஒன்றும் புதிதல்ல ...
இவர்களை பற்றிய விவரங்களை
எழுதிக்கொண்டிருந்தார்;
இவர்களுக்கு மட்டும் ஏனோ இன்னும்
நா தழுதழுத்துக்கொண்டிருந்தது.
கீற்றில் தேட...
நா தழுதழுத்தது
- விவரங்கள்
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
- பிரிவு: கவிதைகள்