பாவனைகள் நிரம்பிய உலகில்
பாவனையற்றவர்கள்
பரிதாபத்துக்குரியவர்கள்..!
உதவுவதாக பாவனை செய்து
உதறித் தள்ளுபவர்கள்
சபைகளின் நாயகர்களாக
காட்சியளிக்கிறார்கள்..!
பாவனைகளில்..
ஆகச்சிறந்தவர்களை
மக்கள் கொண்டாடுகிறார்கள்
மாபெரும் தலைவர்களாக..!
பாவனை கலைந்திட்ட போது
பதட்டமடைகிறார்கள்..!
பாவப்பட்ட மக்களைப் போலவே
பரிவட்டம் கட்டிய தலைவர்களும்..!
நம்பகத் தன்மை மிக்க
பாவனைகளால் சிலர்..
நாட்டை ஆள்கின்றனர்..!
சிலரின் பாவனைகள்
சிலரோடு ஒத்துப் போவதால்
சிநேகம் வளர்க்கிறார்கள்..!
சுருதி பேதம் கொள்ளும்
பாவனைகளால்..
குடும்பங்கள் சிதறுகின்றன..!
போர்கள் நிகழ்கின்றன..!
எதிர்த்துப் போரிட்டவர்கள்
வெற்றி பெற்றவர்கள்
பின்னால் போகிறார்கள்..!
தோற்றுப் போன பாவனையை
மாற்றிக் கொண்டு..!