ஒரு தேசத்தைக் கட்டமைப்பதில் உயர்கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனால் தான் உலக நாடுகள் பலவும் உயர்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகின்றது. உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நாடுகள் கூட, கல்வித்துறையில் வியாபாரத்தை அனுமதிக்க தயங்கி வருகின்றன.

ஆனால், நவீன தாராளமயக் கொள்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் இந்திய அரசோ, கல்வியில் வியாபாரத்தை அனுமதிப்பது மட்டுமல்லாது, அதை சகல விதத்திலும் ஊக்குவிக்கும் வேலைகளையும் கபில்சிபில் தலைமையில் திறம்பட செய்து வருகின்றது. மத்திய அரசின் கொள்கைகளை சகல துறையிலும் அப்படியே பின்பற்றிய கடந்த கால திமுக அரசு, உயர்கல்வியிலும் வியாபாரத்தை ஊக்குவித்தது.

கணக்கற்ற தனியார் கல்லூரிகள் பெருக அனுமதியளித்ததும். அக்கல்லூரிகளின் கண்மூடித்தனமான கல்வி வியாபாரத்தை கண்டு கொள்ள மறுத்ததும் இன்று தமிழக உயர்கல்வியின் தரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. மாநிலத்தின் சமூகத் தேவைக்கும், வளர்ச்சிக்குமான அடிப்படையில் உயர்கல்வி விரிவாக்கம் என்பதை மறுத்து, கல்வி வியாபார பெருக்கத்திற்காக உயர்கல்வி விரிவாக்கம் என்ற அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டது. 2006ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும்போது தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 285. 2011 ல் திமுக ஆட்சிக்காலத்தின் கடைசி மாதத்தில் அக்கல்லூரிகளின் எண்ணிக்கை 488. இக்காலகட்டத்தில் ஒரு புதிய அரசுபொறியியல் கல்லூரிகூட துவக்கப்படவில்லை. பல்கலைகழக உறுப்புக்கல்லூரிகளாக சில துவக்கப்பட்டன. ஆனால் 203 தனியார் கல்லூரிகள் துவங்கப்பட்டன.

கடந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் தனியார் கல்லூரிகள் பெருக்கத்திற்கும், புதிய அரசு கல்லூரிகள் துவக்கத்திற்கும் உள்ள இடைவெளியே, தரமான உயர்கல்வியை மாணவர்களுக்கு வழங்குவது குறித்த திமுக வின் கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கின்றது.

அரசு கல்வி வழங்குவது என்பதிலிருந்து பின்வாங்கி, அப்பொறுப்பை தட்டிக்கழித்து, வேக வேகமாய் தனியார் வசம் அப்பொறுப்பை தள்ளிவிட்டு நடத்திய தாராளமய வஞ்சகம் பளீரென தெரிகிறது. அது மட்டுமல்ல, அரசு கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தி கொண்டு பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் துவக்கப்பட்டன. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி எவ்வித ஏற்பாடுகளையும் செய்யாமல் துவக்கப்பட்ட இக்கல்லூரிகளின் மொத்த நிர்வாகத்தையும் பல்கலைக் கழகங்கள் தான் கவனிக்க வேண்டும், (அடிப்படை வசதி, ஆசிரியர் நியமனம் ஊதியம் உட்பட)தனியார் கல்லூரிக்கான அனைத்து அம்சங்களும் கொண்ட அரசு கல்லூரிக்கான எந்த அம்சங்களும் இல்லாத கல்லூரிகள் இவை.புதிதாக பெருகிய தனியார் பொறியியல் கல்லூரிகளின் கட்டணங்களை நீதிபதிகள் அடங்கிய குழு வரையறுத்து அறிவித்தாலும் நன்கொடை என்ற பெயரிலும், பலவித கட்டணங்கள் என்ற பெயரிலும், பலவித கொள்ளைகள் அடிக்கப்பட்டே வருகின்றது. தனியார் மருத்துவ கல்லூரிகள் கால் கோடிக்கும் மேல் தான் பேரத்தையே துவங்குகின்றன. மறுத்ததும் இன்று தமிழக உயர்கல்வியின் தரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதன் காரணமாகவே, கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் 20,000 இடங்கள் காலியாக கிடந்தன. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அதிமுக அரசும் 9 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளையே துவங்கியுள்ளது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக அரசின் தவறான செயல்பாடுகளை துறைவாரியாக பட்டியலிட்ட அதிமுக, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக மாறியவுடன், கல்வித்துறையில் திமுக கடைபிடித்த நாசகர கொள்கைகளையே தானும் உயர்த்திப்பிடிக்கிறது. கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் கட்டணங்களை நிர்ணயம் செய்யும் நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு அடுத்த 3 ஆண்டுகளுக்கான கட்டணங்களை அறிவித்தது. அதில் தனியார் பொறியியல் கல்லூரி கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. கடந்த ஆண்டு கட்டணமே தொடரும் என அறிவித்தது.

தனியார் கல்லூரி நிர்வாகங்களே, கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தெரிவித்திருந்தது அக்குழு.     தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் குழுவிடம் கட்டண உயர்வு போதவில்லை என கூப்பாடு போடும் கல்வி வியாபாரிகள், பொறியியல் கல்லூரி கட்டணங்களை மட்டும் உயர்த்த வேண்டாம் எனச் சொல்வது ஏன்? இதில் கல்லூரிகள் நடத்தும் பலர் தனியார் பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் உயர்கல்வி மீதான அக்கறையால் அல்ல, மாறாக தேர்ந்த வியாபார நோக்கத்தால் ஏற்கனவே, வருடந்தோறும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படுவதில்லை. இந்த ஆண்டு 25, 000 பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் என தகவல்கள் வருகின்றன. கல்விக் கட்டணங்கள் அதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. பள்ளிக் கல்வியை பொருத்தவரை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியாரை விட அதிகம். அதனால் கட்டணங்களால் பாதிக்கப்படுவோர் அரசுப்பள்ளியை நோக்கி நகர்ந்து விடுவர். ஆனால் உயர்கல்வியில் அதுவும் பொறியியல் மருத்துவத்தில் அரசு கல்வி நிலையங்களே சிறந்து விளங்குகின்றன. ஆனால் சொற்ப எண்ணிக்கையில் உள்ளன.

எனவே, மாணவர்களை கவருவதற்காக கல்வி கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. ஆனால், கலந்தாய்வு முடிந்து கல்லூரிக்கு, மாணவர் சேர்க்கைக்கு செல்லும்போது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பலமடங்கு பணத்தை கறந்து விடுகின்றனர். சீருடையே தராமல், வருடந்தோறும் சீருடைக்கென்று பத்தாயிரம் ரூபாய் வசூலிக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் பல உள்ளன தமிழகத்தில்.தனியார் கல்லூரிகளின் இந்த உச்சபட்ச வசூலை, தமிழக அரசு கண்டுகொள்வதே இல்லை. இதுவரை அதிக கட்டணங்கள் குறித்து கொடுக்கப்பட்ட அடுக்கடுக்கான புகார்கள் குறித்து ஒரு கல்வி நிலையம் மீதுகூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதற்கும் அறிவியல் பூர்வமான காரணமும் கிடையாது.      இதிலும் தமிழக அரசு தலையிடுவதில்லை. . மருத்துவ கல்வி வழங்குவதற்கான செலவு அதிகரித்துவிட்டதாக கட்டண நிர்ணயகுழு முன்பு எந்த ஆவணமும் சமர்பிக்கப்படவுமில்லை.

சந்தையில் அளிப்பை (supply) விட, தேவை (demand) அதிகமாக உள்ளது. அதனால் கட்டணங்கள் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கேட்ட அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன. பொறியியல் படிப்பில் தேவையை விட அளிப்பு அதிகமாக உள்ளது. அதனால் அக்கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பொதுவாக பொறியியல் மற்றும் மருத்துவ கல்வி கட்டணங்கள், தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்கள் குறித்து முடிவு செய்யப்படும்போது பயனீட்டாளர்கள் என புதிய தாராளமய ஆதரவாளர்கள் குறிப்பிடும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் கேட்கப்படவே இல்லை. உயர்கல்வி முழுக்க வியாபாரம் ஆக்கப்பட்டதன் விளைவு இது.

தனியார் கல்வி நிலையங்கள் மீதான புதிய அரசின் நிலைபாட்டை பற்றி அரசின் உயர்கல்விக்கான முதன்மைச் செயலாளர் ஆர். கண்ணன் அவர்கள்ஜூலை 11 அன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். தற்போதைய அரசு தனியார் கல்லூரிகளை ஒழுங்குபடுத்துமே தவிர நிர்ப்பந்தம் தர மாட்டோம். அதன் விளக்கம் இதுதான் விதிகள் இயற்றப்படும் மீறினாலோ, பின்பற்றவில்லை என்றாலோ எதுவும் செய்யமாட்டோம். அதாவது கல்வித்துறை வியாபாரிகளுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யாது என்பதே. நாடு நாளை என்னவாகும்?

Pin It