இலக்கிய மேடையில்
இருமிக்கொண்டே பேசுகிற
ஒடிசல் தேகன்
எடுத்தெறிந்து கொண்டிருந்தான்
வார்த்தைகளை.
சில நாட்களுக்கு முன்னர்
இதே மேடையில்
பளுதூக்கும் காட்சியொன்று
நடந்ததாய் நினைவு.
உற்றுப்பார்க்கையில்
இலக்கியம் பேசிக்கொண்டிருந்தவன்
பளுத்தூக்கவியலாது
வாயில் ரத்தம்
வழியச்சரிந்துகொண்டிருக்கிறான்.
அரங்கவாயிலில்
பளுதூக்கும் வீரன் சொன்ன கவிதைக்காக
அனைவரும் கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அவன் வீட்டுக்குக் கிளம்பிச்செல்வதை
ஒலிப்பெருக்கி அமைப்பாளன்
கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
கீற்றில் தேட...
இடவலமாற்றம்
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்