வழியனுப்ப வந்தவர்களும்
கையசைத்து இருப்பிடம் திரும்பிவிட
வெறிச்சிட்ட இரயில் நிலையத்தில்
வீசி வீசிப் பெய்யும்
மழையின் தனிமை
ஈரம் விலக்கிய
இரயிலின் பயணமோ
வெடிப்புற்ற நிலம் வழி நிகழ்கிறது
கொடுங்கழுகின்
கால்களிலிருந்து விடுபட்ட
பாலை சர்ப்பமொன்றின் உயிர்
காற்றில் நழுவி
விரையும் இரயில் முதுகில் மோதி
நெளிந்து நெளிந்து கீழே விழுந்து
சக்கரங்களில் சிக்கி அரைபடுகிறது
சிதைவுண்ட
வறண்ட பிரதேச உடலுதறி
விரையும் இரயிலின் இரத்தத்தினை
பல்லாயிரம் மைல்களுக்கப்பால்
பெய்யும் மழை கழுவலாம்.
- கணேசகுமாரன்