இங்கே வித்தியாசமாய்
தீப்பிடித்தப்பின்
உரசிக்கொண்டு
தீக்குச்சிகள்
இங்கே வித்தியாசமாய்
இட வலம் வல இடம்
மேல் கீழ் கீழ் மேல்
வாசிப்பில் ஒரே புத்தகம்
இங்கே வித்தியாசமாய்
எதையும்
கண்டெடுக்க முடியாதெனும்
தெளிவோடு
தொடங்கி முடியுமொரு தேடல்
இங்கே வித்தியாசமாய்
உதிர்வதற்கெனவே
கோர்க்கப்பட்டு பூக்கள்
இங்கே வித்தியாசமாய்
பிடித்ததாய் ஒரு யுத்தம்
இங்கே வித்தியாசமாய்
மீண்டும் மீண்டும்
கற்பித்தல்
தெரிந்த பாடம்
தெரிந்தவருக்கே
இங்கே வித்தியாசமாய்
பேரோசையின் குரல்வளையை
கவ்விக் கொண்டொரு மௌனம்
இங்கே வித்தியாசமாய்
உடைந்து கலந்து ஒன்றாக
வித்தியாசங்களெல்லாம்
- க.ஆனந்த் (