நண்பகல் இருட்டியிருந்தது
காற்றழுத்தம் சுருண்டு
கொந்தளிப்பாகிறது கடல்
அடித்து வெளுக்கும் ஒரு மழைக்காக
தங்கள் கனவுகளை போர்த்தியுறங்கும் பொருட்டு
தேவதைகள் காத்திருக்கிறார்கள்
காற்றின் அழுத்தமோ
பலகீனமான மையங்களை உதசீனித்து
நிலைகொள்ளாமல் அலை மோதுகின்றது
பகலிருள் அகலவில்லை
மழையும் பெய்தபாடில்லை
அங்குமிங்குமாக
மையம் தேடி தவிக்கிறது காற்றழுத்தம்
தூரத்தில் ஒற்றடை கம்புகள் உயர்ந்து
திரண்ட கருமேகங்களை விரட்டியடிக்கின்றன
மேகங்களில் நகரும் விரிசல்களில்
மெல்லப் பகல் பகலாகின்றன
சூல்கொண்ட மழைமேகம்
மனமின்றி கலைகின்றது
- ஜி.எஸ்.தயாளன் (