அவன் தூரிகை பட்ட
இடமெல்லாம் வண்ணமாகிறது
அவன் தூரிகை தொட்ட
வண்ணத்திலும் வண்ணம் பிறக்கிறது

அவன் கை பட்ட வெண்தாளெல்லாம்
விந்தையாய்த் தெரிகிறது
கண்ணாடிப் பேழைக்குள்ளும்
அவன் கைவண்ணம் சிரிக்கிறது

பலகையில் இளஞ்சிவப்புச் சூரியனை
செந்நீலக் கடல் நீராட்ட
விண்மீனும் நீர்மீனும் வண்ணவண்ணமாய்
கூடி நடுவீட்டில் நடனமாடுகிறது

முயல்களும் மான்களும் காகிதம் விட்டு
அவன் வீட்டுக் கட்டிலுக்குத் தாவ
பாறை இடுக்குத் தவளைகளும்
பலகையில் பளிச்சென்று சிரிக்கின்றன

அறையின் கிண்ணமெல்லாம் வண்ணம்-அவன்
மனதின் எண்ணமெல்லாம் வண்ணம்
அவன் உடலெங்கும் வண்ணம்
இழும்பிய வண்ணவண்ணக் கோடுகள்

அந்த வண்ணங்களில் எப்பொழுதுமே
உடலும் உயிரும் நனைந்த வண்ணம் அவன்-
ஓவியத்தின் வண்ணங்களைத் தவிர வாழ்வின்
பிற வண்ணங்கள் இல்லாத ஓவியமாய் ஓவியன்...

Pin It